இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்த நாளைக் கொண்டாடப் போவதில்லை என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் வாழும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காகவும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும், உயிர்களையும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
மேலும் இலங்கைத் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்ற இந்த சோதனையான தருணத்தில், இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன். எனவே, கழக உடன் பிறப்புகள் எனது பிறந்த நாளன்று என்னை சந்திப்பதை தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.