ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சீர்காழி காங்கிரஸ் இணை செயலர் தீக்குளிப்பு!
சனி, 7 பிப்ரவரி 2009 (12:30 IST)
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், தனது கட்சியை கண்டித்தும் நாகை மாவட்டம் சீர்காழி காங்கிரஸ் இணை செயலர் இன்று அதிகாலை தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி பிடாரி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45). இவர் சீர்காழி 17வது வார்டு காங்கிரஸ் கட்சியின் இணை செயலராக உள்ளார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் ரவிச்சந்திரன், தன் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடினார்.
நடுத்தெருவில் வைத்து, "இலங்கையில் போரை நிறுத்து....தமிழ் வாழ்க.....'' என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரைக் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் ரவிச்சந்திரன், மயிலாடுதுறை நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தில், ''நேற்று இரவு டி.வி.பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஈழத் தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன். இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது.
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அங்கே அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஈழத் தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன்’’ என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்தநிலையில் ரவிச்சந்திரனை பார்ப்பதற்காக காங்கிரஸ் பிரமுகர்கள் வந்ததாகவும், அவர்கள் ரவிச்சந்திரனை பேச விடாமல் தடுத்ததாகவும், அப்போது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அவர்களை தடுத்ததாகவும், இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து இரு தரப்பையும் கலைத்து பதற்றத்தை தணிக்க காவல்துறையினர் முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வின்போது டி.எஸ்.பி. ஒருவரின் மூக்கு கிழிந்து ரத்தம் பீறிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் இலோசான தடியடி நடத்தி பதற்றத்தை தணித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ரவிச்சந்திரன் தீக்குளிப்பதற்கு முன்பு பத்திரிகை ஒன்றில், ஈழத்தமிழர்கள் துயரம் தன்னை மிகவும் பாதித்ததாக எழுதி வைத்துள்ளார். கூடவே தமிழீழம் வாழ்க என்றும் ராஜபக்சே ஒழிக என்றும் முழக்கங்களையும் எழுதி வைத்துள்ளார்.
ரவிச்சந்திரனின் தாயார் சாரதாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவர் மகளிர் காங்கிரஸ் பிரிவான மகிளா காங்கிரஸ் உறுப்பினர்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இணை செயலர் ஒருவர் தீக்குளித்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.