இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் முழு ஆதரவு தெரிவித்து வரும் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடைபெறும் என்று அச்சங்கத்தின் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வரும் 4ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழு ஆதரவு தெரிவித்து அன்றைய தினத்தில் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும்.
அந்நாளில் தமிழ்நாட்டில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட வணிகர் சங்கம் அலுவலம் முன்பாக தமிழ்த் தியாகி முத்துக்குமார் திருவுருப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழ்நாட்டில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த எழுச்சிக்கு காரணம் முத்துக்குமார் தீக்குளித்து மரணம் அடைந்ததுதான்.
இந்த எழுச்சியை முழுமையாக பயன்படுத்தி இலங்கையில் அமைதிக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரவை கடையடைப்பு நடத்தி இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறது. அத்துடன் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ள மருந்து வணிகர் சங்கமும் காலை முதல் மாலை 4 மணி வரை இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த பொது வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என்று மாநில அரசு அறிவித்திருப்பதை நாங்கள் ஏற்கவில்லை. இந்த முயற்சியை முதல்வரும் பயன்படுத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று த.வெள்ளையன் கூறினார்.