இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ள பொது வேலை நிறுத்தத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போரை நிறுத்தக்கோரி தமிழகத்தில் உள்ள ஒன்றிரண்டு அரசியல் கட்சிகளைத் தவிர பிற அனைத்துக்கட்சிகளும் கட்சி சாராத அமைப்புகளும், மாணவர்களும் இன உணர்வுள்ள அனைத்து தரப்பு பொதுமக்களும் கொந்தளித்து எழுந்துள்ளனர். தூத்துக்குடி முத்துக்குமார், பள்ளபட்டி ரவி ஆகியோர் தீக்குளித்து மாண்டுள்ளனர்.
கடலூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிளைப் பொறுப்பாளர் தீனதயாளன் என்கிற நீதிவளவன் 70 அடி உயரமுள்ள தனியார் அலைபேசி கோபுரத்திலிருந்து ஈழம் வெல்க என்னும் முழக்கத்தை எழுப்பியவாறு குதித்துத் தற்கொலை செய்ய முயன்று கை மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்த நிலையில் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பலர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய கொதிப்பான சூழலில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி எதிர் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இப்போராட்டம் தமிழகத்தில் நடைபெறுவதால் தமிழக அரசுக்கு எதிரானது அல்ல. அரசால் அல்லது ஆட்சியிலிருக்கிற தி.மு.க.வால் இத்தகைய போராட்டத்தை அறிவிக்க இயலாது என்கிற சூழலில் ஆட்சியில் இல்லாத கட்சிகள், கட்சி சாராத அமைப்புகள் தமிழக மக்களின் உணர்வுகளை ஒருமுகமாகக் குவிக்கும் வகையில் ஜனநாயக அடிப்படையிலான பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
ஆகவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கிற கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சி ஆகிய கட்சிகளில் உள்ள மனிதநேய உணர்வாளர்கள், இன உணர்வாளர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்று போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைக்க வேண்டுமென்று தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
அரசு இத்தகைய போராட்டத்தை அறிவிக்கக்கூடாது என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மற்றபடி பொதுமக்கள் இத்தகைய போராட்டங்களை தன்னெழுச்சியாக நடத்துவது சட்டவிரோதமாகாது. ஆகவே ஒட்டுமொத்தத் தமிழகமும் கிளர்ந்தெழுந்து இந்திய- சிங்களக் கூட்டுச் சதியை முறியடிக்கும் வகையில் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டுமாறும் போராட்டத்தை அமைதியாகவும் கட்டுப்பாடாகவும் நடத்த ஒத்துழைக்க வேண்டுமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
பிப்ரவரி 4ல் பொது வேலை நிறுத்தம் நடைபெற இருப்பதனால், அதே நாளில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்துவதாக அறிவித்திருந்த சிங்கள தேசியக்கொடி எரிப்பு போராட்டம் தவிர்க்கப்படுகிறது. வேறு வடிவிலான போராட்டத்தை பிறிதொரு நாளில் நடத்துவதற்குரிய செயல் திட்டங்களை வரையறுத்து பின்னர் அறிவிக்கப்படும். ஆகவே விடுதலைச் சிறுத்தைகள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான களப் பணிகளையும், பிப்ரவரி 7ஆம் நாள் நடைபெறவுள்ள பகுதிவாரியான கறுப்புக்கொடி ஊர்வலங்களுக்கான ஏற்பாடுகளையும் முழு வீச்சில் ஆற்ற வேண்டுமென்று திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.