பணம், அதிகாரம், பலாத்காரம் ஆகியவற்றை பயன்படுத்தி கூட்டணிக்கு அரசியல் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு தி.மு.க திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி வெறும் மாயைதான் என்று தெரிவித்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க கூட்டணி சேர்த்துக்கொண்டு தங்கள் பணத்தையும் செலவழித்துவிட்டு வெற்றி பெற்ற தொகுதியையும் இழந்துவிட்ட வேதனை தான் மிச்சம் என்று கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் இதுவரையில் இல்லாத வழக்கத்திற்கு மாறாக நடைபெற்ற இடைத்தேர்தல் ஆகும். இந்திய தலைமை தேர்தல் ஆணையாளரே தமிழ்நாட்டில் இந்த இடைத்தேர்தல் பீகாரையும் மிஞ்சிவிட்டது என்று சொல்லியுள்ளார்.
அதற்கு எடுத்துக்காட்டாக ஜார்க்கண்டில் ஒரு முதலமைச்சரே தேர்தலில் தோற்றுப்போனார். அந்த அளவுக்கு அங்கு தேர்தல் முறையாக நடைபெற்றுள்ளது. ஆனால் அமைதிக்கும், நாகரீகத்திற்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முடியுமோ அந்த அளவுக்கு திருமங்கலம் இடைத்தேர்தலில் நிலைநாட்டியுள்ளனர். ஆகவே இந்த தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதில் ஆச்சர்யமில்லை.
கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டால் கரையில் சுனாமி அடிக்குமென்பது நாம் கண்ட அனுபவம். திருமங்கலம் இடைத்தேர்தல் ஒரு அரசியல் சுனாமி போல் வந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்கான திருமங்கலத்தில் பொழிந்து தள்ளிவிட்டது. ஆளுங்கட்சியும், ஏற்கனவே ஆண்ட கட்சியும் இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பண மழையை கொட்டித் தீர்த்தனர்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே ஒரு குட்டி இடைத்தேர்தலுக்கு கோடிக் கணக்கில் கொட்டிய வரலாறு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய துர்பாக்கிய சம்பவமாகும். எந்த அளவுக்கு திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் பணம் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது என்றால், தங்கள் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வராதா என்று இதர பகுதியிலுள்ள தமிழக மக்களும் ஏங்கும் அளவுக்கு இருந்தது.
தமிழ்நாடே இவர்களின் ஆட்சியால் இன்று பிச்சைக்கார மடமாக மாறி வருகிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். மலை குலைந்தாலும் நிலை குலைய மாட்டோம் என்ற அடிப்படையில் இந்த சூறாவளியிலும் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தே.மு.தி.க.விற்கு வாக்கு அளித்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் இந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாவார்கள்.
தேர்தல் என்றால் ஏழைகள் வாக்களித்தால் மட்டும் போதாது, தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இன்று தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்ந்து கொண்டு தேர்தல்களை கோடீஸ்வரர்களின் சூதாட்டக்களமாக ஆக்கிவிட்டது. தமிழ்நாட்டை இந்த இழிநிலையிலிருந்து மீட்க வேண்டிய பெரும் கடமை தே.மு.தி.க.விற்கு உண்டு.
பணம், அதிகாரம், பலாத்காரம் ஆகியவற்றை பயன்படுத்தி கூட்டணிக்கு அரசியல் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு தி.மு.க இந்த இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி வெறும் மாயைதான். அ.தி.மு.க கூட்டணி சேர்த்துக்கொண்டு தங்கள் பணத்தையும் செலவழித்துவிட்டு வெற்றி பெற்ற தொகுதியையும் இழந்துவிட்ட வேதனை தான் மிச்சம். ஆனால் நமக்கோ இந்த தேர்தல் களத்தில் ஈடுபட்டு நாணயத்திற்கும், நல்லொழுக்கத்திற்கும், நேர்மைக்கும் நாம் தனித்து நின்று போராடியதே நமக்கு கிடைத்த வெற்றிதான்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் காலையிலிருந்து மதியம் வரை 41 சதவிகிதம் தான் வாக்குகள் பதிவாயின. பொதுவாக வாக்காளர்கள் காலையில் தான் வாக்களிக்க வருவார்கள். நேரம் செல்லச்செல்ல வாக்குகள் பதிவாவது குறையும்.
ஆனால் மாலையில் திடீரென 90 சதவிகிதம் வாக்குகள் பதிவாயின என்றால் அது ஒரு புரியாத புதிர் அல்லவா? ஏற்கனவே தி.மு.க சார்பில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்போமென்று அறிக்கை விடுத்ததற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்பதை பொதுமக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.