திருமங்கலம் தொகுதிக்கு ஜனவரி 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் லதா அதியமானும், அ.இ.அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கமும், தே.மு.தி.க. சார்பில் தனபாண்டியனும் ச.ம.க. சார்பில் இரா. பத்மநாபனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். பா.ஜ.க. இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
நேற்று வரை அ.தி.மு.க.வேட்பாளர் முத்துராமலிங்கம், தே.மு.தி.க. வேட்பாளர் தனபாண்டியன் உள்பட 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இறுதிநாளான இன்று தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் இரா. பத்மநாபன் உள்பட ஒரே நாளில் 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 36 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் பரிசீலனை நாளை (டிச.23) நடக்கிறது. வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ள 25ஆம் தேதி கடைசி நாளாகும். 26ஆம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஜனவரி 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
திருமங்கலம் தொகுதியின் ம.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் வீர.இளவரசன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.