ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை ஆதரித்தும் ராஜீவ்காந்தி படுகொலை பற்றி விமர்சனம் செய்தும் பேசினார்.
சீமானின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, அவரை (சீமானை) தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன் உள்பட காங்கிரஸ் பிரமுகர்கள், இயக்குனர் சீமான் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் செயலருமான ஆர்.எம்.பழனிச்சாமி, விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசி வரும் இயக்குனர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு டவுன் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் கேசவர்த்தினி பேருந்து நிறுத்தம் அருகில் இயக்குனர் சீமான் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த காரை நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு ஓடி விட்டனர். கார் தீப்பற்றி எரிவதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீயை அணைப்பதற்குள் கார் பலத்த சேதம் அடைந்தது.
இது குறித்து சீமானின் உதவியாளர் வளசரவாக்கம் காவல்துறையில் புகார் செய்துள்ளார். காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.