இய‌க்குன‌ர் ச‌ங்க‌த் தலைவராக பாரதிராஜா தே‌ர்வு

திங்கள், 15 டிசம்பர் 2008 (10:27 IST)
இய‌க்குன‌ர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார்.

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததையடுத்து கடந்த மே மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட பிரசசனையில் உதவி இயக்குனர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி, சங்கத் தேர்தல், சென்னை பிலிம்சேம்பரில் நேற்று நடந்தது. 1200 உறுப்பினர்களில் 669 பேர் வாக்களித்தனர். காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடந்தது. தேர்தல் அதிகாரியாக எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்தார். மேற்பார்வையாளர்களாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ஸ்ரீவித்யா, ஜெயசுதா ஆகியோர் இருந்தனர்.

மாலையில் ஓட்டு எண்ணிக்கை நடந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவர் பதவிக்கு பாரதிராஜா, ஆர்.சி.சக்தி, ஜாக்கிராஜ் போட்டியிட்டனர். பாரதிராஜா 511 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்.சி.சக்தி, 148 ஓட்டு பெற்றிருந்தார். பொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணி 487 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார்.

எதிர்த்து போட்டியிட்ட புகழேந்தி தங்கராஜ் 110 ஓட்டு பெற்று தோல்வியடைந்தார். பொருளாளராக ஆர்.சுந்தர்ராஜன் 306 ஓட்டு பெற்று வெற்றி அடைந்தார். எதிர்த்து போட்டியிட்ட வி.சேகர் 266 ஓட்டு பெற்று தோற்றார். துணை தலைவர்களாக விக்ரமன் (505), சசிமோகன் (368) வெற்றி பெற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்