எவ்வளவு பயிர்கள் சேதம் அடைந்தாலும் நிவாரணம் : கருணாநிதி
''ஒரு விவசாயிக்குச் சொந்தமான எவ்வளவு ஹெக்டேர் பயிர் சேதமடைந்தாலும் அனைத்துக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
வெள்ள நிவாரண விநியோகத்தில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி கடந்த 11.12.2008 அன்று சாலை மறியல் போராட்டத்தில் இரு கம்யூனிஸ்டு கட்சிகள், அ.தி.மு.க., ம.தி.மு.க., அவற்றின் அணியினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் எவ்வளவு பேர் கைதானார்கள்?
ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் கைதானார்கள் என்றும்; பின்வரும் மாவட்டங்களான தஞ்சாவூரில் 3,250 பேரும், திருவாரூரில் 1,960 பேரும், புதுக்கோட்டையில் 569 பேரும், நாகப்பட்டினத்தில் 2,077 பேரும், கடலூரில் 1,562 பேரும், ஆக மொத்தம் 9,418 பேர் சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சாலை மறியலின்போது கைதாகினர் என்று காவல்துறை கூறுகிறது.
"சாலை மறியல் செய்து கைதான விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாண்டியன் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளாரே?
"கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போன்ற சட்ட விரோத செயல்களை அரசு அனுமதிக்காது; நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று முன்கூட்டி அறிவுறுத்தப்பட்டதை நினைத்துக் கொண்டு; ஒருவேளை அவர்களெல்லாம் விடுதலை செய்யப்படவில்லையோ என்ற எண்ணத்தில் தோழர் பாண்டியன் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்க கூடும். இது என்ன; "எஸ்மா'', "டெஸ்மா'' ஆட்சியா? கைது செய்யப்பட்ட 9,418 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்பதை பத்திரிகை செய்தியாளர்களும், பாண்டியனும் தெரிந்து கொள்ளாததுதான் நமக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது.
பயிர்ப்பாதுகாப்பு "இன்ஸ்சூரன்ஸ்'' திட்டத்தில் தம் பெயரையும் பதிவு செய்து கொண்டுள்ள விவசாயிகள்; தங்கள் பயிர் இழப்பீட்டுக்கான நிவாரணத் தொகையையும் சேர்த்து; மொத்தம் எவ்வளவு இழப்பீடு பெறுகிறார்கள்?
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு அரசு வழங்குகிற ஏழாயிரத்து ஐநூறு ரூபாயுடன், பயிர்ப்பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் கிடைக்கக் கூடிய இழப்பீட்டையும் சேர்த்தால் குறைந்தபட்சமாக மொத்தம் பத்தாயிரம் ரூபாய் வரையில் ஒரு விவசாயி நிவாரணம் பெற்று பயன்பெற முடியும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாயும், முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இரண்டு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளார்களே?
இது போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகளில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் இருக்கும் கம்யூனிஸ்டு அரசு; எவ்வளவு நிவாரணத் தொகை அளிக்கிறதோ; அதைக் காட்டிலும் அதிகமாக ஆயிரம் ரூபாய் அளித்திட இந்த அரசு நிச்சயமாக முன்வரத் தயாராகவே இருக்கிறது.
வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக வழங்கிட மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள தொகை எவ்வளவு? தமிழக அரசு வழங்கிடும் தொகை எவ்வளவு?
புயல், பெருமழை வெள்ளத்தின் காரணமாக உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி என்று மத்திய அரசு வரையறை செய்துள்ளதற்கு மாறாக; தமிழக அரசு அதனை அதிகப்படுத்தி ரூ.2 லட்சம் வழங்குகிறது. சேதம் அடைந்த பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 வழங்குகிறது.
சேதம் அடைந்த பயிர்களுக்கு ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர் வரைதான் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயம் செய்துள்ளது; ஆனால் தமிழக அரசு அதற்கு மாறாக; அந்த உச்சவரம்பை நீக்கி, ஒரு விவசாயிக்கு சொந்தமான எவ்வளவு ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்திருந்தாலும் அனைத்துக்கும் நிவாரண நிதி வழங்கி வருகிறது.
பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கலாம் என்று மத்திய அரசு ஆணையிட்டிருந்த போதிலும்; தமிழக அரசு அந்த 2 ஆயிரம் ரூபாயுடன் 10 கிலோ அரிசியும் இலவசமாக வழங்குகிறது.
முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு இலவசமாக வேட்டிகள், சேலைகள் வழங்க வேண்டும்; அவர்தம் குடும்பங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் இருந்தால் அவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க வேண்டும் என்பதெல்லாம், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் இல்லை; எனினும், தமிழக அரசு அவற்றை வழங்கி வருகிறது.
இது மாதிரி இயற்கை இடர்ப்பாடுகள் ஏற்படுகிற போது மட்டுமல்லாமல், ஏனைய சந்தர்ப்பங்களிலும் விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு நிர்ணயிக்கின்ற தொகையை காட்டிலும் அதிகமாகவே தமிழக அரசு வழங்கி வருகிறது. எடுத்துக்காட்டுகள் வேண்டும் என்றால், சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை; குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி வழங்கி வருகிறது; சன்ன ரக நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை குவிண்டால் ஒன்றுக்கு 930 ரூபாய்; மாநில அரசு குவிண்டால் ஒன்றுக்கு 1,050 ரூபாய் என்று அதிகரித்து வழங்கி வருகிறது.
தமிழகத்திற்கு வந்து மழை, வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்த மத்திய குழு, தமிழக அரசு செய்து வரும் வெள்ள நிவாரணப்பணிகளை பாராட்டியுள்ளதே?
தமிழகத்திற்கு வந்த மத்திய குழுவின் தலைவர் ஸ்கந்தன் ஐ.ஏ.எஸ்., "மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்தது போல் இங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும், அதிகாரிகளும் மக்களுடன் இணைந்து நல்ல முறையில் உதவி செய்துள்ளனர். இல்லையெனில் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். கலெக்டர்கள், அதிகாரிகள் ஆகிய அனைவரையும் நாங்கள் பாராட்டுகிறோம்'' என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் நிவாரணப்பணிகளை அனைத்து தரப்பினரும் பாராட்டியே வருகின்றனர் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.