கூடுதல் நிவாரணம் கோரி மறியல் செய்த ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
வியாழன், 11 டிசம்பர் 2008 (17:57 IST)
டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கைது செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கனமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்களும், ஆயிரக்கணக்கான வீடுகளும் கடுமையாக சேதம் அடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரியும், டெல்டா மாவட்டங்களை இயற்கை பேரிடர் தாக்கிய பகுதியாக அறிவிக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தன.
அதன்படி இன்று டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. நாகை மாவட்டம் புத்தூர் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் நாகை மாவட்டம் முழுவதும் நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.