ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வேண்டும்: ம‌த்‌திய குழு‌விட‌ம் விவசா‌‌யிக‌ள் கோ‌ரி‌க்கை

வியாழன், 11 டிசம்பர் 2008 (10:29 IST)
திருவாரூர், நாகையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா‌ர்வை‌யி‌ட்ட மத்திய குழுவின‌ரிட‌ம் அழுகிய நெற்பயிர்களைக் காட்டிய விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்குமாறு கேட்டு‌க் கொ‌ண்டனர்.

த‌மிழக‌த்த‌ி‌ல் பெய்த பலத்த மழையால் 12 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதி வேண்டுகோளின்படி வெள்ள சேதத்தை மதிப்பிட மத்திய உள்துறை இணைச் செயலாளர் ஸ்கந்தன் தலைமையில் 9 பேர் குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அனுப்பினார்.

சென்னை வந்த இவர்கள் 2 குழுவாக பிரிந்து நேற்று முன்தினம் வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டனர். ஸ்கந்தன் தலைமையிலான குழுவினர் தஞ்சை மாவட்டத்திலும், மத்திய அரசின் குடிநீர் விநியோகத் துறை கூடுதல் ஆலோசகர் தேஷ்பாண்டே தலைமையிலான குழுவினர் கடலூர் மாவட்டத்திலும் வெள்ள சேதங்களை பார்வையிட்டனர்.

இரண்டாவது நாளாக ஸ்கந்தன் குழுவினர் திருவாரூர் மாவட்ட‌த்தில் வெள்ள சேதங்களை நேற்று பார்வையிட்டனர். மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில் பாமணி ஆற்றில் ஏற்பட்ட உடைப்பு, முத்துப்பேட்டையில் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள், வயல்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

எடையூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட நிவாரண முகாம்களுக்கு சென்று, அங்கிருந்தவர்களிடம் சேதம் குறித்து கேட்டனர். ஓவர்குடியில் மரக்காகோரையாறில் ஏற்பட்ட உடைப்பையும் பார்வையிட்டனர். பூமிநத்தம், எண்கண் பகுதியில் வெட்டாற்றில் ஏற்பட்ட உடைப்பை, சீரமைக்கும் பணியை ஆய்வு செய்தனர்.

குழுவினர் சென்ற வழியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அழுகிய நெற்பயிர்களை காட்டி நியாய மான நிவாரணம் வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டனர்.

மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருடன் மத்திய குழுவினர் ஆய்வுக்கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில், ‘திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பெய்யும் மழை நீருக்கு கடைமடை பகுதியான திருவாரூர்தான் வடிகாலாக உள்ளது. அங்கிருந்து வரும் தண்ணீரால்தான் அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பிரசசனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். ஆறுகள், வாய்க்கால்களில் பல இடங்களில் உள்ள மணல் திட்டுகள், காட்டாமணக்கு செடிகள் அகற்றப்பட வேண்டும். ஆறுகளின் கரைகளை உயர்த்த வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட நிரந்தர வீடுகள் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

தேஷ்பாண்டே தலைமையிலான மத்திய குழுவினர் நாகை மாவட்டத்தில் வெள்ள சேத பாதிப்புகளை நேற்று பார்வையிட்டனர். கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்கள், சாலைகள், வடிகால், வாய்க்கால்களை ஆய்வு செய்தனர்.

விவசாயிகள், அவர்களிடம் அழுகிய பயிர்களை காட்டி, ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்