காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு 10 நேரடி பேருந்துகள்
புதன், 10 டிசம்பர் 2008 (19:19 IST)
காஞ்சீபுரத்தில் இருந்து நேரடியாக தியாகராய நகர், பூந்தமல்லி, தாம்பரம் போன்ற இடங்களுக்கு மொத்தம் 10 பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மா.ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், காஞ்சீபுரத்தில் இருந்து நேரடியாக கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் தியாகராயநகர் போன்ற இடங்களுக்கு ஒரே பேருந்து மூலம் பயணம் செய்வதற்கு வசதி செய்யப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் கோரி வருகிறார்கள்.
இதனை ஏற்று, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு 2 புதிய குளிர்சாதன பேருந்துகள் மற்றும் 2 புதிய வழித்தடங்களில் 8 சொகுசு பேருந்துகள், வியாழக்கிழமை (டிசம்பர் 11) முதல் இயக்கப்படுகின்றன.
தடம் எண்- 576 தியாகராயநகர் - காஞ்சீபுரம் (2 பேருந்துகள்). இவை, கிண்டி-போரூர்-சுங்குவார்சத்திரம்-வெள்ளைகேட் வழியாக இயங்கும். 576 சி- பூந்தமல்லி-காஞ்சீபுரம் (4 பேருந்துகள்) மற்றும் 579 சி- தாம்பரம்-காஞ்சீபுரம் (4 பேருந்துகள்).
காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில், இந்த பேருந்துகளை தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.