இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகாவுக்கு கருணாநிதி கடும் கண்டனம்
திங்கள், 8 டிசம்பர் 2008 (16:18 IST)
இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா, தமிழக தலைவர்களை விமர்சனம் செய்து பேசியது உண்மை என்றால் அது கண்டிக்கத்தக்கது என்று கூறிய முதலமைச்சர் கருணாநிதி, இங்குள்ள தமிழக தலைவர்கள் ஒருவரைவொருவர் விமர்சனம் செய்வது என்பது வேறு, அயல்நாட்டவர் ஒருவர் தமிழக தலைவர்களை இப்படி விமர்சனம் என்பது வேறு. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
webdunia photo
FILE
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு வெள்ள நிவாரண பணிகளை சிறப்பான முறையில் செய்து வருகிற போதிலும் அதனை குறை கூறுவதும் அல்லது விமர்சனம் செய்வதும்தான் எதிர்க்கட்சிகளின் போக்காக உள்ளது. அப்படி அவர்கள் கூறும் குறைகளை திருத்திக்கொண்டு நாங்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு வருகிறோம் என்றார்.
கடந்த ஆண்டு மத்திய அரசிடம் கேட்ட வெள்ள நிவாரண தொகை உரிய அளவு கிடைக்கவில்லை என்று கூறிய கருணாநிதி, இந்த ஆண்டு கேட்ட நிவாரணத் தொகை நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி!
தற்போது 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் முழுமையாக கிடைக்கவில்லை. இருப்பினும் வந்துள்ள வரையில் காங்கிரஸ் கட்சிக்கு இது வெற்றி என்றுதான் கூற வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியில் அமரும் என்றார் கருணாநிதி.
இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா, தமிழக தலைவர்களை விமர்சனம் செய்து பேசியது உண்மை என்றால் அது கண்டிக்கத்தக்கது என்று கூறிய முதலமைச்சர் கருணாநிதி, இங்குள்ள தமிழக தலைவர்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளின் அடிப்படையில் ஒருவரைவொருவர் விமர்சனம் செய்வது என்பது வேறு, அயல்நாட்டவர் ஒருவர் தமிழக தலைவர்களை இப்படி விமர்சனம் என்பது வேறு. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் போர் நிறுத்தம் வேண்டுமென்பதையே சமீபத்திய டெல்லி பயணத்தின்போது பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் வலியுறுத்தினோம். மத்தியில் அமைய உள்ள புதிய அமைச்சரவையில் தமிழகத்துக்கு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சிதான் என்றார் கருணாநிதி.
மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க அரசின் அத்தனை துறைகளின் சார்பாக கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த கருணாநிதி, மத்திய அரசிடம் கேட்டிருந்த 2,000 மொகாவட் மின்சாரத்தில் இந்த வாரம் ஆயிரம் மெகாவாட்டும், அடுத்த மாதம் ஆயிரம் மெகாவாட்டும் கிடைக்கும் என்றார்.
அருந்ததியர் ஒதுக்கீடு அமைப்பது தொடர்பான துணை கமிட்டி குழுவினர் இன்று அறிக்கை தந்துள்ளனர். விரைவில் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.