சுகாதார‌ச் ‌சீ‌ர்கே‌ட்டை க‌‌‌ண்டி‌த்து போரூரில் ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!

ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (13:27 IST)
போரூ‌ர் பகு‌தி‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள சுகாதார‌ச் ‌சீ‌ர்கே‌ட்டை ‌சீரமை‌க்காத ‌தி.மு.க. அரசை‌க் க‌‌‌ண்டி‌த்து, அ.இ.அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் வரு‌ம் 9ஆ‌ம் தே‌தி மாபெரும் க‌‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட போரூர் நாற்சந்தியில், எனது ஆட்சிக் காலத்தில் மேம்பாலப் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மேற்படி மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், அதேபோல், வானகரம் பைபாஸ் சாலை - நெற்குன்றம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரையிலான சாலைப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், போரூர் பேரூராட்சி மற்றும் மதுரவாயல், வளசரவாக்கம் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, பொது மக்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இப்பகுதிகளில் குப்பை, கழிவுநீர் ஆகியவை அகற்றப் படாததன் காரணமாக சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

ராமாபுரம், நெற்குன்றம், வானகரம், அயப்பாக்கம், நொளம்பூர் மற்றும் கராம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தி வந்த மின்சாரத்தைக் குறைத்து தொழில் உற்பத்தி முடக்கப்பட்டு உள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதை‌க் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட அ.இ.அ‌.‌தி.மு.க. சார்பில் 9ஆ‌ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில், போரூர் காரம்பாக்கம் அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எ‌ன்று கூற‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.