தமிழகத்தில் கைத்தறித் தொழில் மிக வேகமாக நசிந்து வருகிறது என்றும் அத்தொழிலைக் காப்பாற்ற தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைத்தறி நெசவாளர்களுக்காக அரசு பல திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறுகின்றனர். ஆனால் அதன் பயன் எதுவும் நெசவாளர்களுக்கு சென்று சேர்வதில்லை. தமிழக கைத்தறித்துறை நல்ல முறையில் உள்ளதாக போலியான தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
கைத்தறி கூட்டுறவு நிறுவனங்கள் குறித்து போலியான கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் பல நெசவு நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன. உதாரணத்துக்கு தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி கிராமத்தில் மட்டும் 4 கைத்தறி கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் எந்த செயல்பாடும் கிடையாது.
வாதிரியார் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.10 லட்சம் கடன் உள்ளது. ஆனால் அதன் சொத்து மதிப்பு ரூ.8 லட்சம் மட்டுமே. ரூ.2 லட்சம் அரசு கடன் உதவி வழங்கினால், 6 மாதத்திற்கு நெசவுத் தொழில் நடைபெறுவதாகக் காட்டினாலும், மீண்டும் பழைய நிலையே தொடர்கிறது.
கைத்தறி நெசவுத் தொழில், நெசவாளர்களின் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. நெசவாளர்களுக்கு நெசவு செய்வதற்கு நூல் கொடுக்க இயலாத நிலையில் பல நிறுவனங்கள் உள்ளன. தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, நலிந்து வரும் கைத்தறித் தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.