இலங்கையில் மொத்தமாக போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் திருப்தி என்றும் இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தலைவலி மருந்து போல் உள்ளது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அங்கு போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக தமிழக அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு புதிய இல்லத்திற்கு வந்த முதல்வர் கருணாநிதி அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், "இலங்கையில் மொத்தமாக போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் திருப்தி. இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தலைவலி மருந்து போல் உள்ளது" என்றார்.
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசுக்கு 2 வார கால கெடு அறிவித்தும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. திரும்ப பெறலாமே என்று கேட்டதற்கு, "மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?" என்று கருணாநிதி கூறினார்.