வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த புயல் 'நிஷா' நாகப்பட்டிணத்துக்கும் கடலூருக்கும் இடையே காரைக்காலில் இன்று காலை கரையை கடந்தது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் மாலை 'நிஷா' புயலாக மாறியது. புயல் தமிழக கடற்கரையை நெருங்கியதால் கனமழை பெய்தது.
நாகப்பட்டிணம் - காரைக்கால் இடையே 50 கிலோ மீட்டர் தொலைவில் 'நிஷா' புயல் மையம் கொண்டு இருந்தது. அது நேற்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் புயல் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது. இன்று காலை 7.30 மணி அளவில் புயல் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து நாகப்பட்டிணத்துக்கும் கடலூருக்கும் இடையே காரைக்காலில் கரையை கடந்தது.
இதனால் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழையோ அல்லது மிக கன மழையோ நீடிக்கும். 65 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசும். கரையை கடந்த புயல் மெதுவாக வலு இழந்து வருகிறது என்றாலும் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.