வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 'நிஷா' என்று பெயரிட்டு உள்ளனர்.
இந்த புயல் நேற்று நாகப்பட்டினத்துக்கு கிழக்கே 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டு இருந்தது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வந்தது. இன்று காலை புயல் வேதாரண்யத்துக்கு கிழக்கே 50 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இன்று பிற்பகல் வேதாரண்யம் அருகே புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இப்போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த சூறை காற்று வீசும் என்றும் அறிவித்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக கடந்த 2 நாட்களாகவே கடலோர பகுதியான ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் பலத்த சூறை காற்று வீசி வருகிறது.
இன்று அதிகாலை 50 கி.மீ வேகத்துக்கு அதிகமாக சூறை காற்று வீசியது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும். பெரிய அளவில் கடல் கொந்தளிப்பும் ஏற்படும். எனவே கடலோர மாவட்ட நிர்வாகங்கள் மீட்பு குழுக்களுடன் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.