சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 26 மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த 12ஆம் தேதி இரு பிரிவு மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் 4 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சட்டக் கல்லூரி முதல்வராக இருந்த ஸ்ரீதேவ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக நெல்லை சட்டக் கல்லூரியில் முதல்வராக இருந்த முகமது இக்பால் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய முதல்வராக பொறுப்பேற்ற இக்பால் மோதல் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
முதல்கட்ட விசாரணையையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்கள் பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாதுரை, சித்திரை செல்வன் உள்பட 21 மாணவர்களை கடந்த 13ஆம் தேதியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட விசாரணையை தொடர்ந்து மேலும் 5 மாணவர்களை முதல்வர் இக்பால் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த 17ஆம் தேதியிலிருந்து இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.