இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி 25ஆம் தேதி அறிவித்துள்ள மறியல் போராட்டத்தை சிறப்பாக நடத்த அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் முன்வரவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு நிர்வாக குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது..
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றிய செயலாளர் ப.ராஜேந்திரன் படுகொலையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீது களப்பால், திருக்களார், கோட்டூர் காவல் நிலையங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 60 டாலருக்கும் கீழ் குறைந்துள்ள சூழ்நிலையில் மத்திய அரசு டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உடனே குறைத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக்கொள்கிறது. இந்த விலை குறைவு எண்ணை நிறுவனங்களது நஷ்டத்தை மட்டுமே குறைக்கும் என்ற மத்திய அரசின் வாதம் முறையற்றது.
விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் இது போன்று விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பதை விடுத்து உருப்படியாக நிவாரணம் அளிக்கும் வகையில் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலையை குறைக்க முன்வரவேண்டும். டீசல் விலையை குறைக்க கோரி லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 25ஆம் தேதி அறிவித்துள்ள மறியல் போராட்டத்தை சிறப்பாக நடத்த அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் முன்வரவேண்டும்.
சென்னை அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் வருந்தத்தக்கது. தடுக்க தவறிய காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். நீண்ட நாட்களுக்கு முன்பாகவே, மாணவர்களுக்கு இடையே மோதல் போக்குகள் இருந்த நிலையில் அவற்றை களைவதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத கல்லூரி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,000 விலை நிர்ணயிப்பதுடன், உரிய காலத்தில் கரும்பு வெட்ட வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.