இலங்கையில் போரை நிறுத்த, உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரை நேரில் சென்று வலியுறுத்த வேண்டும் என்றும் பாம.க. தலைவர் ஜி.கே. மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இலங்கை தமிழர்களை வேரோடு அழிக்க சிறிலங்க அரசு மூர்க்கத்தனத்தோடு செயல்பட்டு வருவதாக குற்றம் சாற்றினார்.
மேலும் "இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சூழ்நிலையை ஒருமுகப்படுத்த முதல்வர் கருணாநிதி உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இந்த கூட்டத்தில் இலங்கை பிரச்சனையில் இந்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சென்று வலியுறுத்த வேண்டும்.
இலங்கை பிரச்சினையில் மனித உரிமை அடிப்படையில் அண்டை நாடுகள் தலையிட உரிமை உண்டு அல்லது ஐ.நா.சபை மூலம் இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசு வலியுறுத்தலாம்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கோரிக்கைகளுக்கும் இணையாக மத்திய அரசின் செயல்பாடு குறைவாக இருப்பது வேதனையாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் எவ்வித தடையுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று சேர வேண்டும்.
பா.ம.க.மகளிர் சங்கம் சார்பில் 28-வது மது ஒழிப்பு மாநாடு வரும் 23ஆம் தேதி கடலூரில் நடைபெறுகிறது" என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.