பெட்ரோல்,டீசல் விலை குறை‌க்க ம‌த்‌திய அரசை முத‌ல்வ‌ர் வ‌லியுறுத்த வே‌ண்டு‌ம்:சரத்குமார்!

வியாழன், 20 நவம்பர் 2008 (10:18 IST)
பெட்ரோல், டீசல் விலைகுறை‌ப்பை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் எ‌ன்று‌ம் தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்துவதுடன், அதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசிலும் செயல்படுத்திட வேண்டும் எ‌ன்று‌ம் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகச்சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததை காரணம் காட்டி அனைத்து தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியது.

ஆனால் தற்போது உலகச்சந்தையில் கச்சா எண்ணை 53 டாலர் அளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்ற அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

டீசல் விலைக்குறைப்பை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் டிசம்பர் 20 முதல் லாரிகள் ஓடாது என்று அறிவித்திருக்கிறார்கள். இதனால் ஏற்கனவே பல மடங்கு உயர்ந்திருக்கும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயரும் நிலை உருவாகும்.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு லாரிகள் வேலை நிறுத்தம் மேலும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

உலகச் சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அரசுத்துறை நிறுவனங்களின் வருவாய் இழப்பை ஈடுகட்ட பொதுமக்கள் மீது சுமைகளை ஏற்றி வைத்தது மத்திய அரசு. அந்த சுமைகளை தற்போது இறக்கி வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தமிழக முதலவர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்துவதுடன், அதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசிலும் செயல்படுத்திட வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களுக்காக ஆட்சி செய்ய வேண்டும். அதை விடுத்து அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் நலனை புறக்கணித்தல், ஜனநாயக மரபுகளுக்கு முரணான செயல்களாக அமையும். எனவே பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு வாய்ப்புள்ள தற்போதைய நிலையில் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்" எ‌ன்று சரத்குமார் கூ‌றியு‌ள்ளா‌ர்.


வெப்துனியாவைப் படிக்கவும்