சட்டக் கல்லூரி மோத‌ல்: உய‌ர் ‌நீ‌தி‌ம‌ன்ற நீதிபதி ‌விசாரணை தேவை- க‌ம்யூ. வ‌லியுறு‌த்த‌ல்!

வியாழன், 20 நவம்பர் 2008 (09:45 IST)
சென்னை, அ‌ம்பே‌த்க‌ர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த மோதல் குறித்து பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க‌ட்‌சி‌ வ‌லியுறு‌த்‌தி‌யு‌ள்ளது.

இது கு‌றி‌த்து‌ அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌ச் செயல‌ர் எ‌‌ன். வரதரா‌ஜ‌ன் வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம், மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் தலையில் கடந்த 18, 19 ஆகிய நாட்களில் நடந்தது. இ‌ந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சட்டக் கல்லூரி மோதல் சம்பவத்தின் பின்னணியில், மாணவர்கள் மத்தியில் சாதி அமைப்புகளின் தலையீடுகள் இருந்துள்ளன என்பதும், ஏற்கனவே பல வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன என்ற விவரங்களும் வெளிவந்துள்ளன. காவல் துறை கண்ணெதிரேயே பயங்கர மோதல் நடைபெற்றது அதிர்ச்சி அளிக்கிறது.

நீதி விசாரணை அறிவித்த பிறகு, அந்த சம்பவம் குறித்து முதல்வர் கருத்து தெரிவிப்பது விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும்.
மேலும் ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பதிலாக பதவியில் இருக்கும் உயரநீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்.

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள சட்டக்கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் போது, தொடர் வன்முறை வெடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிகின்றது. அதனால் அதற்கு முன் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும்" எ‌ன்று வரதராஜன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்