தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு!

வியாழன், 20 நவம்பர் 2008 (06:06 IST)
சிறிலங்க கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த 17 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த 17 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக சிறிலங்க கடற்படை சிறைபிடித்து யாழ்ப்பாணம் கொண்டு சென்றது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் ஊர்காவல் துறையினர், 17 மீனவர்கள் மீதும் வழக்கு தொடர்ந்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மீனவர்கள் 17 பேரையும் வரும் 26 ஆம் தேதி வரை காவலில் வைத்து மீண்டும் ஆஜர்படுத்துமாறும், மீனவர்களின் 5 விசைப் படகுகளை பாதுகாப்பாக வைத்து, அவர்கள் பிடித்த மீன்களை விற்று பணத்தை மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, 17 தமிழக மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகவலை நிரபராதி மீனவர்கள் கூட்டமைப்புத் தலைவர் அருளானந்தம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்ட ‌மீனவ‌ர்களை ‌விடுதலை செ‌ய்யு‌‌ம் வரை வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபட‌ப் போவதாக புது‌க்கோ‌ட்டை ஜெகதாப‌ட்டின‌ம் ‌மீனவ‌ர்க‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இதற்கிடையே, கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படை விரட்டியடித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்