ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலராக என்.கே.கே.பி. ராஜா ‌மீ‌ண்டு‌ம் தேர்வு!

புதன், 19 நவம்பர் 2008 (11:13 IST)
ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலராக முன்னாள் அமைச்சரஎன்.கே.கே.பி. ராஜா ‌மீ‌ண்டு‌ம் தேர்வு செய்யப்பட்டு‌ள்ளார்.

ஈரோடு மாவட்ட செயலர் தேர்தல் நேற்று மாலை நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக ஏற்கனவே மாவட்ட செயலராக இருக்கும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மனுதாக்கல் செய்தார். இவரை எதிர்த்து மாவட்ட கவுன்சிலர் இளஞ்செழியன் மற்றும் கொடுமுடியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகியோர் மனு செய்தனர்.

மாவட்ட துணை செயலர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களை பத்திரப்படுத்தினர். மொத்தம் 14 யூனியன், 43 பேரூராட்சிகள், ஒன்பது நகரம், 150 மாவட்ட பிர‌திநிதகள் மொத்தம் 216 வாக்குகள் கொண்டதாகும்.

நேற்று மதியம் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா தன் ஆதரவாளர்களுடன் வந்தார். அவர் வந்ததும் எதிரணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ராஜாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பே வாழ்த்து தெரிவிக்கின்றீர்களே என்றதற்கு கட்சியின் கட்டுப்பாடு மற்றும் வரும் தேர்தலில் பணியாற்ற ஒற்றுமை உள்ளிட்டவைகளை மனதில் கொண்டு எங்கள் ஆதரவாளர்களை உங்களுக்கே வாக்களிக்க கூறிவிட்டோம் என செல்வராஜ் கூறினார்.

இதையடு‌த்து, ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலராக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மற்றும் அவரது குழுவினர் போட்டியின்றி தேர்‌ந்தெடுக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்