6-வது ஊதியக் குழு பரிந்துரை குழுவின் காலஅளவு நீட்டிப்பு!
புதன், 19 நவம்பர் 2008 (10:44 IST)
தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் சம்பளத்தை மாற்றி நிர்ணயம் செய்வது தொடர்பாக பரிந்துரை செய்வதற்கு தமிழக அரசு அமைத்த அதிகாரிகள் குழுவின் கால அவகாசத்தை பிப்ரவரி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம், படி ஆகியவை அளிக்கப்படுகிறது. அதுபோல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் ஆகியோருக்கும் சம்பளத்தை மாற்றி அமைத்து, அந்த ஊதிய விகிதத்தை அமல்படுத்தலாமா? என்பது பற்றி ஆராயவும், அரசுக்கு பரிந்துரைக்கவும் அதிகாரிகள் குழுவை தமிழக அரசு நியமித்தது.
இந்தக் குழு, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது. நிதித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் நிர்வாகத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியவற்றின் முதன்மைச் செயலர்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப சம்பளம், குடும்ப பென்ஷன், ஓய்வுகால பயன்கள் உள்ளிட்டவற்றை மாற்றி அமைத்து அமல்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளையும், அறிக்கையையும் 3 மாதங்களுக்குள் அரசுக்கு வழங்க வேண்டும் என்று இந்தக் குழு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. சங்கங்களின் மனுக்களை இந்தக் குழு பெற்றுள்ளது. இவர்கள் தவிர அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், தனிப்பட்ட ஊழியர்கள், பென்ஷன்தாரர்களும் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்.
இந்த குழுவுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் 19ஆம் தேதியோடு (இன்று) முடிகிறது. இந்த விவகாரம் குறித்து இன்னும் இறுதி அறிக்கை தயாரிக்கவில்லை. அறிக்கை தயாரிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே 19ஆம் தேதியில் இருந்து மேலும் 3 மாத கால அவகாசத்தை இந்தக் குழு கேட்டுள்ளது. அதன்படி மேலும் 3 மாதங்களுக்கு இந்த குழுவின் காலஅளவை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.