25-ம் தேதி முழு அடைப்புக்கு பதிலாக மறியல் போராட்டம் - தா. பாண்டியன்!
செவ்வாய், 18 நவம்பர் 2008 (23:37 IST)
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த முழு அடைப்புக்கு பதிலாக மறியல் போராட்டம் நடைபெறும் என்று தா. பாண்டியன் அறிவித்துள்ளார்!
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலர் தா. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
17-11-2008 அன்று நடந்த சர்வ கட்சி கூட்டத்தில், இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்தக்கோரி, 25ம் தேதி தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் செய்வது என எடுக்கப்பட்ட முடிவு குறித்து, இலங்கை போரினால் இலங்கை தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதில் ஒத்த கருத்துள்ள கட்சிகள், அமைப்புகள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக முழு கடையடைப்பு போராட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளன.
தமிழக மக்களின் குரல் உறுதியோடு ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என்பதால் போராட்ட முறையை மாற்றிட கலந்து ஆலோசிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள், அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க முழு அடைப்பு என்பது தவிர்க்கப்படுகிறது.
இலங்கையில் போர் நீடிப்பதால், கோரிக்கை பற்றி மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்தக்கோரியும், 25-ம் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன்னர், 'இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்ற ஒரே கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்று மறியலில் ஈடுபடுவோர், இந்த கோரிக்கையை தவிர வேறு எந்த முழகத்தையும் எழுப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கட்டுப்பாட்டுடனும், துக்கத்துடனும், இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றும் உயரிய பொறுப்புணர்வுடன் தமிழக மக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க அறைகூவி அழைக்கிறோம் என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.