சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் கடந்த 12ஆம் தேதி மாணவர்களுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில் பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாத்துரை ஆகிய 3 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தனிப்படை காவல்துறையினர் நேற்று வரை 17 மாணவர்களை கைது செய்துள்ளனர். ரவிவர்மன் என்ற மாணவர் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் மாக்ஸ் என்ற ரவீந்திரன், மணிமாறன், குபேந்திரன், வெற்றிக்கொண்டான் ஆகிய 4 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செல்வகுமார், வேல்முருகன் என்று 2 மாணவர்கள் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சட்டக் கல்லூரி மோதல் தொடர்பாக இதுவரை 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டும், 3 மாணவர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்தும் உள்ளனர். இதுவரை மொத்தம் 24 மாணவர்கள் காவல்துறையினரின் பிடியில் சிக்கி உள்ளனர்.
இந்த மோதல் தொடர்பாக மேலும் சுமார் 15 மாணவர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. அவர்கள் தலை மறைவாக உள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.