குடிநீர் கட்டண உயர்வை ‌திரு‌ம்ப பெறா‌வி‌ட்டா‌ல் மாபெரும் போரா‌ட்ட‌‌ம் : ஜெயலலிதா எ‌ச்ச‌ரி‌க்கை!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (14:59 IST)
சென்னை மாநகர மக்க‌ள் மீது சுமத்தப்பட்டுள்ள குடிநீர் உய‌ர்வு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் மக்கள் சக்தியைத் திரட்டி மாபெரும் போராட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்ற அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீட்டர் பொருத்தப்பட்ட அனைத்துக் குடியிருப்புகளுக்கும் ஒரு கிலோ லிட்டர் த‌ண்‌‌ணீ‌ர் ரூ.25 என சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், சென்னையில் குடிநீருக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ள வீடுகளில், ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் ரூ.1,000 வீதம் மூன்று மாதங்களுக்கு ரூ.3,000 செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், இதனை உடனடியாக செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.

எனது ஆட்சிக் காலத்தில் சென்னையில் உள்ள குடியிருப்புகளில் ஒரு வீட்டுக்கு குடிநீர் கட்டணமாக மாதம் 50 ரூபாயும், குடிநீர் வரியாக வீட்டின் சொத்து மதிப்புக்கு ஏற்ற தொகையையும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 20 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தற்போதைய குடிநீர் கட்டண உயர்வு காரணமாக, நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். சென்னை மாநகரில் வாடகைக்கு குடியிருப்போர் அதிக வாடகை மற்றும் அதிக மின் கட்டண வசூலிப்பு ஆகியவற்றால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தி.மு.க. அரசு அறிவித்துள்ள குடிநீர்க் கட்டண உயர்வு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.

இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கையினால், நிலைமையை சமாளிக்க, அனைத்து வீடுகளிலும் உள்ள ஏழை, எளிய மக்கள் தண்ணீரை கூட பார்த்துப் பார்த்து குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது போன்ற குடிநீர்க் கட்டண உயர்வு சென்னை மாநகரம் முழுமைக்கும் நடைமுறைப் படுத்தப்பட்டால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். இதனால் சென்னை மாநகரில் நிலத்தடி நீர் வற்றிப் போகும் அபாய நிலை உருவாகும்.

நுகர்வோரின் முக்கியத்துவத்தைக் கருதியும், நுகர்வோரின் மன நிறைவை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு வசதிகள் சென்னை மாநகர மக்களுக்கு எனது ஆட்சிக் காலத்தில் செய்து கொடுக்கப்பட்டன. அதே சமயத்தில், ஏழை, எளிய மக்களின் நலனை முன்னிட்டு அவர்கள் மீது எந்தவித கூடுதல் நிதிச் சுமையையும் எனது அரசு திணிக்கவில்லை.

சென்னை மாநகர மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பன் மடங்கு குடிநீர்க்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க. சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடிநீர் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்பட்டாலும், மாதம் ஒன்றுக்கு 50 ரூபாய் வரும் அளவுக்கு ஏற்றாற்போல் ஒரு கிலோ லிட்டருக்கான ரூபாயை மாற்றி அமைக்க வேண்டும்.

சென்னை மாநகர மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குடிநீர்க் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், அ.தி.மு.க. மக்கள் சக்தியைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும்" எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.