முதல்வர் கருணாநிதி இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :
webdunia photo
FILE
கோவையில் அண்ணா நூற்றாண்டு விழா, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் சார்பில் 16ஆம் தேதியன்று மிக மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த என்னை செய்தியாளர்கள் காலையில் சந்தித்த போது - சென்னை சட்டக் கல்லூரி விவகாரத்தில் ஜெயலலிதா உங்களைக் குற்றஞ்சாட்டி, தார்மீகப் பொறுப்பேற்று நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்கிறாரே, அவரைப் போலவே வைகோவும் அதே கருத்தைச் சொல்லியிருக்கிறாரே - என்று கேட்ட போது - நான் கிண்டலாக - "இதிலேயிருந்து என்ன தெரிகிறது என்றால், என்னை ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்வதற்காக மாணவர்களின் இரு சாராரையும் இவர்களே தூண்டி விட்டு சண்டை போடச் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது'' - என்று சொன்னவுடன் செய்தியாளர்கள் அனைவரும் அதனை ரசித்து சிரித்து விட்டனர். ஏடுகளிலே அந்தக் கேள்வி பதிலை பிரசுரித்து விட்டு பக்கத்திலேயே "சிரிப்பு'' என்றும் வெளியிட்டுள்ளார்கள்.
இந்தப் பதிலுக்காகத்தான் எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதா என் மீது அவதூறு வழக்கு போடுவேன் என்று அவசர அவசரமாக அறிக்கை விடுத்துள்ளார். வழக்கு வரட்டும், சந்திக்கின்றேன், இந்தக் கருத்துக்கே வழக்கு என்றால், அம்மையார் மீது - அவர் பேசுகின்ற பேச்சுக்களின் மீது - எத்தனை வழக்குகள் போட வேண்டியிருக்கும் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் இரண்டு தரப்பாக நின்று மோதிக் கொண்டால், அதற்கு முதலமைச்சரா காரணம்? அதற்காக நான் ராஜினாமா செய்ய வேண்டுமா? இவரது ஆட்சிக் காலத்தில் தினம் ஒரு மோதல் - தினம் ஒரு கொலை - தினம் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று நடைபெற்றதே - அதற்காக இவர் எத்தனை முறை பதவி விலகி இருக்க வேண்டும்? அப்போது இவருக்கு தார்மீகப் பொறுப்பு இல்லையா? இதே கேள்விக்கு சட்டப் பேரவையில் சட்ட அமைச்சர் தம்பி துரைமுருகன் அடுக்கடுக்கான கேள்விக்கணைகளைத் தொடுத்தாரே, அதற்கு அம்மையாரின் பதில் என்ன?
சட்டக் கல்லூரியிலே மாணவர்களிடையே மோதல் என்றதும், உடனடியாக அதனைத் தடுக்க முயலாத காவல்துறையின் மீது அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு - சென்னை மாநகர காவல் துறையின் ஆணையரே மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்த நிலையிலே இருந்த இணை ஆணையரும் மாற்றப்பட்டுள்ளார். அதற்கடுத்த நிலையிலே உள்ள உதவி ஆணையரும், ஆய்வாளரும் தற்காலிகப் பணி நீக்கமே செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை இருபதுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து உடனடியாக நீதி விசாரணைக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. இத்தனை நடவடிக்கைகளுக்கும் பிறகு அம்மையார் என்னை ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொன்னால், அதைவிட கோமாளித்தனம் என்ன இருக்க முடியும். அதனால்தான் கோவையிலே செய்தியாளர்கள் கேட்ட போது நான் கிண்டலாகப் பதில் கூறினேன். அதற்காக அவதூறு வழக்கு போடுவதாக அம்மையார் அறிக்கை விடுத்துள்ளார்.
சட்டமன்றத்திற்கு வந்து பதிலளிக்க வக்கில்லாத கருணாநிதி என்று அறிக்கையிலே ஜெயலலிதா சொல்கிறார். இவர் சட்ட மன்றத்திற்கு எத்தனை நாட்களுக்கு வந்தார், நான் எத்தனை நாட்களுக்கு வந்தேன் என்று கணக்கெடுத்துப் பார்க்கலாமா? அலுவல் ஆய்வுக் குழு ஒன்றுக்காவது அவர் வந்தது உண்டா? ஏன் அவையிலே முக்கிய விவாதங்களுக்கு பதில் எழுதி வைத்துக் கொண்டு படிக்கக் கூடாது என்பதாகும். அதன்படி முக்கிய விவாதங்களுக்கு இவர் எழுதி வைத்துக் கொண்டு தானே படித்தார். சட்டமன்றத்திலே இவர் ஐந்தாண்டு கால ஆட்சியில் எத்தனை கேள்விகளுக்கு அவரது துறையின் சார்பில் பதில் அளித்திருக்கிறார்?
1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த ஐந்தாண்டு காலத்தில் 6 கேள்விகளுக்குத் தான் பதிலளித்தார். 1996 முதல் 2001 வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியிலே முதலமைச்சர் என்ற முறையில் நான் 136 கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கிறேன். 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது முதலமைச்சர் என்ற முறையில் 7 கேள்விகளுக்குத்தான் ஜெயலலிதா பதில் அளித்தார். தற்போது ஐந்து நாட்கள் நடைபெற்ற சட்டமன்றத்திற்கு ஒரு நாள் கூட வராத இந்த உத்தம சிரோன்மணி நான் ஒரே யொருநாள் வராதது பற்றி சட்டமன்றத்திற்கு வர வக்கற்ற கருணாநிதி என்று குறை கூறுகிறார். இன்னும் சொல்லப் போனால், தன்னைத் தவிர தன் கட்சியிலே உள்ள யாரையும் பாராட்டவோ, புகழவோ கூடாது என்றும், அவர்களுக்கு யாரும் சால்வைகள் அணிவிக்கக் கூடாது என்றும் அறிக்கைவிட்டுள்ள இவர் எத்தகைய அருங்குணங்களைக் கொண்டவர் என்பதை நன்கு புரிந்து கொள்ளலாம்.
மேலும் ஜெயலலிதா அறிக்கையிலே பசும்பொன் கிராமத்திற்கு அவர் சென்ற போது, கருணாநிதியின் மகன் அழகிரியின் ஆட்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர் என்று சொல்லியிருக்கிறாரே, அதற்கு என்ன ஆதாரம். எதை வைத்து அழகிரி மீது இத்தகைய குற்றச்சாட்டினை இவர் சொல்லியிருக்கிறார். இதற்காகவே இவர் மீது அவதூறு வழக்கு தொடுக்கலாமே! அம்மையார் வாய் உதிர்த்தால், அது உண்மை, மற்றவர்கள் கூறுவதற்கு அவதூறு வழக்கா? சந்திக்கலாமே அதனை! பசும்பொன் கிராமத்திற்கும் அழகிரிக்கும் என்ன சம்மந்தம் குறிப்பிட்ட நேரத்திற்கு பசும்பொன் கிராம பிரச்சனைக்கும் செல்லாமல், காலதாமதமாக இவர் எதற்காகச் சென்றார் கால் தடுக்கிய காரணத்தால், அதனை அபசகுனமாகக் கருதி நிகழ்ச்சிக்கே போக மறுத்து வீட்டிற்குத் திரும்பிய ஜெயலலிதா வம்பு வளர்ப்பதற்காகத்தானே பிறகு அங்கே சென்றார்!
சிறிய மண்டபத்திற்குள் அங்கே திரண்டிருந்த அத்தனை அ.தி.மு.க.வினரும் உள்ளே செல்ல முயற்சித்தால், ஜெயலலிதாதானே சிரமப்பட வேண்டி யிருக்கும். அதற்காக காவல்துறையினர் உள்ளே விடமறுத்த காரணத்தால்தானே காவல்துறையினர் மீது அ.தி.மு.க.வினர் கல் எறிந்தார்கள். அப்போது அங்கே திரண்டிருந்த அத்தனை அ.தி.மு.க. வினரிடையே வேறு யாராவது உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முடியுமா? அப்படி நடத்தினால், பக்கத்திலே உள்ள அ.தி.மு.க.வினர் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? அ.தி.மு.க.வினர் முழுவதுமாக திரண்டிருக்கும்போது, வேறு யாராவது அங்கே சென்று தாக்குதல் நடத்திட முயல்வார்களா? பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண்டாமா?
பசும்பொன் கிராமத்திலே இவருக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளே செய்ய வில்லையா? அதையும் குறையாகச் சொல்லியிருக்கிறார். இதைப் போன்று தொடர்ந்து சொல்லிச் சொல்லித்தான் மத்திய அரசு இவருக்கு "இசட்பிளஸ்'' பிரிவில் பாதுகாப்புத் தரவேண்டுமென்று ஆணையிட்டுள்ளது. "இசட்பிளஸ்'' பிரிவில் உள்ளவருக்கு ஒட்டுமொத்தமாக 54 பேர் தான் பாதுகாப்புக்காக காவல்துறையினரை ஒதுக்க வேண்டும். இது மத்திய அரசின் உத்தரவு. ஆனால் தமிழகத்திலே இவருக்கு 84 பேர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் தனக்கு பாது காப்பு இல்லை, பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து புலம்பிக் கொண்டே வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியின் போது இசட்பிளஸ் பிரிவிலே இருந்த எனக்கு 54 பேரை பாதுகாப்பிற்காக ஒதுக்கியிருக்க வேண்டியதற்குப் பதிலாக 43 பேரைத்தான் ஒதுக்கியிருந்தார்கள். இருந்தாலும் எனக்குப் பாதுகாப்பு போதவில்லை என்று நான் சொல்லிக் கொண்டா இருந்தேன்?
பசும்பொன் கிராமத்திற்குச் சென்றபோது, ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காகவே 174 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு அலுவலிலே ஈடு பட்டிருந்தார்கள். அதையும் தவிர்த்து அன்றைக்கு அந்த நினைவிடத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஆயிரம் பேர் தனியாக ஈடு பட்டிருந்தார்கள். இவ்வளவிற்கும் பிறகு பசும்பொன்னில் பாதுகாப்பு போதவில்லை என்றால் என்ன செய்வது அரசாங்கத்தின் சார்பில் எவ்வளவு பேரை தனியாக இவர் ஒருவருக்காக மட்டுமே ஒதுக்க முடியும். குண்டு துளைக்காத கார் வேண்டும் என்றார். அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிலே ஜெயலலிதா பயணம் செய்கிறாரா? கிடையாது. தேவையில்லாமல் அரசிடமிருந்து அதனைப்பெற்று வைத்துக் கொண்டிருக்கிறார்.
மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதிக்கு கேடு காலம் பிறந்து விட்டது என்றும் ஜெயலலிதா அறிக்கையிலே சாபம் கொடுத்துள்ளார். யாருக்கு கேடு காலம் என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். எண்பத்தி ஆறு ஆண்டுக் காலம் வாழ்ந்து விட்ட எனக்கு; இனிமேல்; கேடு காலமல்ல; எந்தக் காலம் வந்தால் என்ன, எது வந்தாலும் தாங்கிக் கொள்ளத்தான் போகிறோம்! தி.மு.க. அரசிற்கு தமிழக மக்கள் சாவு மணி அடிக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் - ஆங்கிலப்பள்ளியிலே படித்தவர் என்று சொல்லிக் கொள்பவர்- எப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை ஜெயலலிதாவைப் பற்றி இதுவரை புரிந்து கொள்ளாத தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.