தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லும் : 'காடுவெட்டி' குரு மனு தள்ளுபடி!
செவ்வாய், 18 நவம்பர் 2008 (13:14 IST)
வன்னியர் சங்க மாநில தலைவர் 'காடுவெட்டி' குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானது செல்லும் என்று கூறி, கைது உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், தமிழ்வாணன் ஆகியோர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், கவனமான பரிசீலனைக்குப் பிறகே அரியலூர் மாவட்ட ஆட்சியர் இந்த கைது உத்தரவை பிறப்பித்ததாகவும் எனவே குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லும் என்று கூறி, குரு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
வன்னியர் சங்க மாநில தலைவரும், பா.ம.க. நிர்வாகிகளில் ஒருவருமான காடுவெட்டி குரு, அரியலூரைச் சேர்ந்த குணசேகரன் என்பவரை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த ஜுலை மாதம் 5ஆம் தேதி காடுவெட்டி கிராமத்தில் கைது செய்யப்பட்டார்.
மேலும் பா.ம.க. பொதுக்குழுவில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குரு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
தன் மீது வேண்டும் என்றே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பழிவாங்கும் நோக்கத்துடன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் தர்மாராவ், தமிழ்வாணன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த நிலையில் இருதரப்பு வழக்கறிஞர்கள் வாதம் முடிவடைந்து விட்டதால் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதிகள் தாங்கள் அளித்த தீர்ப்பில், குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லும் என்று கூறி, குரு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.