இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தை நாளை பேரணி!
திங்கள், 17 நவம்பர் 2008 (16:16 IST)
இலங்கையில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை மாணவர் அணி சார்பில் சென்னையில் நாளை எழுச்சிப் பேரணி நடத்தப்படுகிறது.
மாநில செயலர் ரவிச்சந்திரன் தலைமையில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் இந்த பேரணி, மன்றோ சிலையில் இருந்து புறப்பட்டு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை நடத்தப்படுகிறது.
பேரணியை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தொடங்கி வைக்கிறார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முடித்து வைக்கிறார். பேரணி முடிவில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றுகிறார்.
பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.