போரை ந‌ிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி 25இ‌ல் முழு அடைப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு!

திங்கள், 17 நவம்பர் 2008 (15:41 IST)
இல‌ங்கை‌யி‌‌ல் நடைபெ‌று‌ம் போரை நிறுத்த மத்திய அரசு, அ‌ந்நா‌ட்டை வற்புறுத்த வ‌லியுறு‌த்‌தி வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி த‌மிழக‌ம் முழுவது‌ம் முழு அடை‌ப்பு நட‌த்த ச‌ெ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ந‌ட‌ந்த அனை‌த்து‌க் க‌ட்‌சி கூ‌டட‌த்‌தி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் கிடையாது என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்துள்ளதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோ‌சி‌க்க இ‌ந்‌‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் அனைத்து கட்சி கூட்ட‌ம் சென்னை தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இ‌ன்று நட‌ந்தது.

இ‌ந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., ம.தி.மு.க., அ‌கில இ‌ந்‌திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் உ‌ள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கலந்து கொண்டன.

இ‌ன்று காலை 11ம‌ணியள‌வி‌ல் கூட்டம் தொடங்கியதும் ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ன் க‌ண்மூடி‌த்தனமாக தாக்குதலுக்கு உ‌ள்ளா‌கி பலியான அ‌ப்பா‌வி‌த் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பி‌ன்ன‌ர், கூட்டம் முடிந்தது‌‌ம் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌‌நில செயல‌ர் தா.பாண்டியன் கூறுகை‌யி‌ல், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஒருவரி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம் ‌எ‌ன்றா‌ர்.

போரை நிறுத்த மத்திய அரசு இலங்கையை வற்புறுத்த வேண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி வரு‌ம் 25ஆ‌ம் தேதி தமிழ‌க‌த்‌தி‌ல் முழு அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

மேலு‌ம் அ‌‌ன்றை ‌தின‌ம் பேரு‌ந்து, ர‌யி‌ல்க‌ள் ஓடாது. கடைகள் அடைக்கப்படும். அனைத்து நிறுவனங்களும் இயங்காது எ‌ன்று கூ‌‌றிய அவ‌ர், இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எ‌ன்று கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.

இ‌ந்‌திய க‌ம்யூனி‌ஸ்‌ட் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌க் கூட்டத்தில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட், பாரதீய ஜனதா, தே.மு.தி.க., ஆகிய முக்கிய கட்சிகள் ப‌ங்கே‌ற்க‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்