கந்தர்வக்கோட்டை அருகே அமைய உள்ள சாராயத் தொழிற்சாலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை பகுதியில் உள்ள கல்லாக்கோட்டை அருகில் 20 ஏக்கர் பரப்பளவில் மிகபிரம்மாண்டமான சாராயத் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், இத்தொழிற்சாலை இங்கு அமையுமேயானால், இப்பகுதியைச்சுற்றி உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எதிர்காலத்தில் நிலத்தடி நீர் பாதிப்பும், நீர்பற்றாக்குறையும், சுகாதாரச் சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர்.
கந்தர்வக்கோட்டை பகுதியில் உள்ள கல்லாக்கோட்டை அருகில் சாராயத் தொழிற்சாலை அமைவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மாணவர் அணியின் சார்பில் 19ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.