ஈரோடு: அரசு பேருந்துகள் ஜப்தி!

திங்கள், 17 நவம்பர் 2008 (12:53 IST)
ஈரோடு மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்காத காரணத்தால், மூன்று அரசு பேருந்துகள் ஒரேநாளில் ஜப்தி செய்யப்பட்டன.

கடந்த 2004ஆம் ஆண்டு சத்தியமங்கலம் - கோவை சாலையில் ஏற்பட்ட விபத்தில் சத்தியமங்கலம் வடக்குபேட்டையை சேர்ந்த பொன்னுசாமி (50), கொளப்பலூர் யசோதா (40) ஆகிய இருவர் காயமடைந்தனர்.

இவர்கள் இருவரும் நஷ்டஈடு கேட்டு கோபி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, யசோதாவிற்கு ஒரு லட்சம் ரூபாயும், பொன்னுசாமிக்கு 89 ஆயிரத்து 620 ரூபாயும் வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் இதனை அரசு போக்குவரத்து கழகம் கொடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் இரண்டு அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்த இரண்டு அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

இதேபோல் ஈரோடு நசியனூரைச் சேர்ந்த வசந்தி 1998ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து, வழக்கு தொடர்ந்தார். அவருக்கு கடந்த 2003ஆம் ஆண்டு ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க ஈரோடு மாவட்ட கூடுதல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை அரசு போக்குவரத்து கழகம் இதுவரை நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் வசந்தி மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் பீட்டர் சுகுமார், வசந்திக்கு வட்டியுடன் சேர்ந்து ரூ.60 ஆயிரம் வழங்கவும், இதற்காக அரசு பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஈரோடு பேருந்து நிலையத்தில் மதுரை கோட்டத்தை சேர்ந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்