சட்டக்கல்லூரி மோத‌‌ல் : நவ. 22இல் மாணவர் பெருமன்றம் உண்ணாவிரதம்!

திங்கள், 17 நவம்பர் 2008 (11:33 IST)
சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே நட‌ந்த வன்முறையை கண்டித்து‌ம், மாணவர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் வரு‌ம் 22ஆ‌ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌‌ந்த அமை‌ப்‌பி‌ன் மா‌நில‌ச் செயல‌ர் ‌திருமலை அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது குறித்து அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே நடைபெற்ற கலவரம் மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கண்ணெதிரே நடைபெற்ற சம்பவத்தை தடுக்காமல், வேடிக்கைப் பார்த்த காவல் துறையினரின் செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது.

தேச விடுதலைப் போராட்டம், சமூக நீதிக்கான போராட்டங்கள், மத நல்லிணக்கம், தமிழ் மொழி பாதுகாப்பு முதலியவற்றுக்காக தமிழக மாணவர்கள் பல வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தற்போது கூட இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தமிழக மாணவர்கள் எழுச்சிமிகுப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சாதீய சக்திகளின் சூழ்ச்சிக்கு இரையாகி சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர் நடத்தியுள்ள வன்முறை மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், சாதிவெறி வன்முறைக்கு எதிராகவும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் நவம்பர் 22ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இப்போராட்டம் நடைபெறும்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்