போரை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் : திருமாவளவன்!
இலங்கையில் போரை நிறுத்த முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சித்தலைவர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
webdunia photo
FILE
சென்னை வேளச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'தமிழ் உயிர்` என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஓவிய முகாமை தொடங்கி வைத்துப் பேசிய அவர், இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகும் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்றும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே ராஜபக்சேவின் பேச்சு சுட்டிக் காட்டுகிறது. அங்கு போர் நிறுத்தம் செய்ய ராஜபக்சேவை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசுதான் இந்த பிரச்சினையில் தீர்வு காண முடியும்.
தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சித்தலைவர்களும் பிரதமரிடம் இதை வலியுறுத்த வேண்டும். இந்திய அரசு இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் அவசியம் ஏற்பட்டால் இந்திய ராணுவம் இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.