சேலத்தில் ரவுடி சுட்டுக் கொலை!

ஞாயிறு, 16 நவம்பர் 2008 (16:00 IST)
சேலம் அருகே பனைமரத்துப்பட்டியில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கோபியை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். காவல்துறையினர் மீது குண்டுவீசி தப்ப முயன்ற போது காவல்துறையினர் துப்பாக்கியால சுட்டதில், கோபி உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (28). பலரிடம் கொள்ளை அடித்து ரவுடியாகச் சுற்றித் திரிந்த கோபி மீது 60க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள், 6 கொலை வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக கோபியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், பனைமரத்துப்பட்டி அருகே ஏரிக்கரை அடுத்துள்ள கோயிலில் அவர் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறையினர் இன்று காலை அங்கு விரைந்து, கோபியைச் சுற்றி வளைத்தனர். அப்போது காவல்துறையினர் மீது நாட்டு வெடி குண்டுகளையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசி ரவுடி கோபி தப்ப முயன்றுள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி ரவுடி கோபியை பிடித்தனர். படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோபி இறந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்