இலங்கையில் போர்நிறுத்தமே திருப்தி தரும்: கருணாநிதி!
ஞாயிறு, 16 நவம்பர் 2008 (13:12 IST)
இலங்கையில் தமிழர்கள் தாக்குதலுக்குள்ளாவது தடுக்கப்பட வேண்டுமானால், அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதே திமுக செயற்குழு மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலக்கரு என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படும்வரை தமக்கு திருப்தி இல்லை என்றும் அவர் கூறினார்.
அண்ணா நூற்றாண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்றுகாலை கோவை வந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இலங்கை தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தி வருகிறோம் என்றும், திமுக சார்பில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா ஆகியோர் பிரதமருடன் தினமும் பேசி இலங்கை பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்து வருவதாகவும் முதல் அமைச்சர் கூறினார்.
மேலும் இது கட்சி ரீதியான கோரிக்கை அல்ல; அரசு ரீதியான கோரிக்கை என்பதால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வலியுறுத்தவில்லை என்றும் கருணாநிதி கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் கூறினார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதே திமுக செயற்குழு மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பதால், அந்த நிலை ஏற்படும் வரை இப்பிரச்சினையில் முழு திருப்தி ஏற்படாது என்றார் கருணாநிதி.
இலங்கையில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்தவே இராணுவத் தாக்குதல் நடத்துவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறுவதாகவும், ஆனால் போரில் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறிய முதல் அமைச்சர், அதனால்தான் ராஜபக்சேவின் பேச்சில் நம்பிக்கை இல்லை என்று தாம் கூறியதையும் சுட்டிக்காட்டினார்.
திமுக கூட்டணியில் பாமக மீண்டும் இடம் பெறுமா? என்று கேட்டதற்கு எதுவும் நடக்கலாம் என்று அவர் பதில் அளித்தார். தமிழகத்தில் மீண்டும் மேல்-சபை வராது என்றும் முதல் அமைச்சர் தெரிவித்தார்.
திமுகவைப் பொருத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் உட்பட எதற்கும் தயாராகவே உள்ளதாகவும் கருணாநிதி குறிப்பிட்டார்.
மத்திய உள்துறை அமைச்சக உத்தரவுப்படி ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகக் கூறிய முதல் அமைச்சர், இந்தப் பணியில் 2 துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 84 போலீசார் ஈடுபடுவதாகக் கூறினார்.
கல்வி நிறுவனங்களில் ஜாதி, மோதல் ஏற்படுவதில் திமுக.வுக்கு எப்போதும் விருப்பம் கிடையாது என்றும் கருணாநிதி கூறினார்.