காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் : அமைச்சர் தகவல்!
வெள்ளி, 14 நவம்பர் 2008 (14:46 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று ஆசிரியர்கள் நியமனம் குறித்து உறுப்பினர்கள் பேசியதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "2008-2009ஆண்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணிஇடங்கள் விரைவில் நிரப்பப்படும்" என்று தெரிவித்தார்.
பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் முதலில் 1:1 என்ற கணக்கில் ஆசிரியர் நியமனத்துக்கு ஆள் எடுத்ததாக கூறிய அவர், அதில் 1,000 பேரை தேர்ந்தெடுத்தால் 500 பேர்தான் வேலையில் சேருகின்றனர் என்றார்.
அழைப்பு அனுப்பப்பட்ட மற்றவர்கள் தனியார் துறையில் வேலை பார்ப்பதால் வருவதில்லை என்றும் எனவே 1:2 என்ற முறையில் பட்டதாரி ஆசிரியர்கள் 7,505 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும், நவம்பர் இறுதிக்குள் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், 5,440 இடைநிலை ஆசிரியர் பணியிடமும், மாநில பதிவு மூப்பு அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும் என்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை பணியிடம் 259 விரைவில் நிரப்பப்படுவதாகவும், வேளாண் பட்டதாரி பணியிடம் நிரப்பப்படுவதாகவும், கணிதம், ஆங்கிலம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
2006-2007ஆம் ஆண்டு தொடக்ககல்வி, பள்ளிக் கல்வியில் 16,160 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும், 2007-2008-ல் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் 15,190 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
இந்த 2 ஆண்டுகளில் மட்டும் 31,350 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.