அரசு அலுவலகங்களில் மின்சார உபயோகத்தை குறைக்க வேண்டும் : தமிழக அரசு உத்தரவு!
வெள்ளி, 14 நவம்பர் 2008 (09:47 IST)
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் மின்சார உபயோகத்தை பில்லுக்கு பில் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "அரசு கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சுற்றுலாத்துறை கட்டிடங்கள், ஓட்டல்கள், தொழிற்சாலைகளில் மின்சக்தி சேமிப்பை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. தவிர்க்க முடியாத நிலையில் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற பயன்பாட்டுக்கு மின்சாரத்தை பயன்படுத்தக்கூடாது.
அரசு கட்டிடங்களைப் பொறுத்தவரையில், உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை கட்டிடங்கள் அடங்கும். இவற்றில் 10 விழுக்காடு மின்சார உபயோகத்தை பில்லுக்கு பில் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாதம் 10 விழுக்காடு குறைக்க வேண்டும். 6 மாதங்களுக்குள் 20 விழுக்காடு மின்சார பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
தெருவிளக்குகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றலுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அரசு அலுவலகங்களில் குண்டு பல்புகளை பயன்படுத்தக்கூடாது. அதற்குப்பதிலாக எலக்டிரானிக் சோக்குகளுடன் கூடிய ஒளிரும் விளக்குகளை (டியூப் லைட்) பயன்படுத்த வேண்டும்.
எரிசக்தி சிக்கனத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ள மின்சாதனங்களை கொண்ட குளிரூட்டும் (ஏ/சி) மெஷின்களை பொருத்தவேண்டும். சோடியம் ஆவி விளக்குகள், மெர்குரி ஆவி விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. அவற்றுக்குப்பதிலாக டியூப் லைட்டுகளை பொருத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் சோடியம் ஆவி விளக்குகளை பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.
தெருவிளக்குகள் எரியும் நேரத்தைக் குறைக்க வேண்டும். முன் கூட்டியே போடுவதைத் தவிர்க்கவேண்டும். அதே சமயம் முன்கூட்டியே அணைக்கவும் கூடாது. குறிப்பாக மாலை 6 மணிக்கு முன் போடக்கூடாது. காலையில் 6 மணிக்கு முன் அணைக்கக்கூடாது.
அலுவலகங்களில் ஒளிரும் (போகஸ்) லைட்டுகளையும், அலங்கார விளக்குகளையும் தவிர்க்க வேண்டும்.
அரசு பொது மருத்துவமனைகள், ஓட்டல்கள், விடுதிகள், 'சர்க்யூட் ஹவுஸ்' போன்றவற்றில் சூரிய சக்தி மின்சக்தியை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும். இவற்றில் தரமான நிறுவனங்களின் சாதனங்களையே பொருத்த வேண்டும்.
மின் சிக்கன நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதை தமிழ்நாடு மின்சார வாரியம் கண்காணிக்க வேண்டும். அத்துடன் கண்காணிப்பு முறைகளையும் வகுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.