இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் கருணாநிதி முன்மொழிந்த தீர்மானத்தின் மீது பேச தனித்தனியாக கட்சி உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் ஆவுடையப்பன் வாய்ப்பளித்தார்.
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை) : இலங்கை அதிபர் இந்தியா வந்துள்ளார். அங்கு படுகொலைகள் நிறுத்தப்பட போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். இதற்கு இந்தியா வழி காண வேண்டும்.
கண்ணப்பன் (ம.தி.மு.க.) : விடுதலைப்புலிகள் தரப்பில் போர் நிறுத்தம் அறிவித்தும் இலங்கை மறுக்கிறது. எனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில், இலங்கைக்கு கொடுத்த ரேடார் கருவிகளை திரும்ப பெற வேண்டும். தொழில்நுட்ப வல்லுனர், ராணுவ அதிகாரிகளை திரும்பப் பெற வேண்டும். தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.பயிற்சிகளை நிறுத்த வேண்டும் பேச்சுவார்த்தையை இருதரப்பினரும் தொடர வேண்டும். இவற்றை இலங்கை செய்யாவிட்டால் தூதரக உறவை துண்டித்து பொருளாதார தடை விதிக்க எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்ற வாசகங்களையும் கூடுதலாக சேர்க்க வேண்டும்.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்) : இலங்கையில் ஒரு இனப்படுகொலையே நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களும் தாக்கப்படுகிறார்கள். இலங்கையில் எப்போதெல்லாம் போர் நடக்கிறதோ அப்போதெல்லாம் தமிழக மீனவர்களும், சுடப்படுகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை தான் முதலில் ரத்து செய்தது. இன்று அங்கு நடைபெறும் இனப் படுகொலையை பல்வேறு நாடுகள் கண்டித்தும் அதை ஏற்காத அரசாக இலங்கை உள்ளது. இதில் மத்திய அரசு விரைந்து முயற்சி எடுக்க வேண்டும்.
மேற்கண்டவாறு உறுப்பினர்கள் பேசினார்கள்.
பாலபாரதி (மார்க்சிஸ்ட்) : இலங்கை அரசு நிபந்தனையற்ற முறையில் போர் நிறுத்தத்தை அறிவிக்க முன் வர வேண்டும் என்ற அம்சத்தை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். போர் நிறுத்தம் செய்யப்பட்டாலும் அது முழு அளவில் அமலாக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
ஜி.கே.மணி (பா.ம.க.) : இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ள நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. ராஜபக்சே இதனை ஏற்பார் என்று நம்புகிறோம். ஏற்காவிட்டால் இலங்கைக்கு இந்தியா எந்த உதவியையும் செய்யாது என்ற வாசகத்தை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்.) : இலங்கையில் அமைதி ஏற்பட்டு அங்குள்ள தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.
ஓ. பன்னீர்செல்வம் (அ.இ.அ.தி.மு.க.) : இலங்கையிலுள்ள தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த கருத்தைதான் பேச வேண்டும் இதில் அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ள கருத்து பேதங்களை மறந்து விட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தங்கள் கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கை அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது தமிழர்கள் தரப்பில் யாரை அழைப்பது என்கிற பொறுப்பையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் கச்சத் தீவு பிரச்சனைக்கும் நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.