ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், அணையில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலையில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரும் அதிகரித்தது.
அதிகபட்சமாக பதினைந்தாயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. தற்போது இந்த அளவு குறைந்துள்ளது.
அணையின் மட்டம் 100 அடியைத் தொடும் நிலையில் இருந்தது. ஆனால், மழை பெய்வது ஓரளவு நின்றதால், தற்போது நீர்வரத்தும் குறைந்துள்ளது.
மேலும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதும், அதிகரிக்கப்பட்டது.
webdunia photo
WD
இன்று காலை அணையின் நீர்மட்டம் 97.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 228 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீரும் பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது அதிகமாக இருப்பதால் அணையில் மீன்பிடிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் ஐந்து டன் முதல் ஏழு டன் வரை மீன்கள் பிடிக்கப்படும். இந்த மீன்கள் பவானிசாகர், சத்தியமங்கலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படும்.
கட்லா, ரோகு, மிருகால் , அவுரி, சிலேபி உள்ளிட்ட முதல் தரமான மீன்கள் தற்போது பவானிசாகர் அணையில் அதிகமாக உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் அணையில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் தற்போது பெரியதாகி ஒரு மீன் சராசரியாக ஐந்து முதல் பதினைந்து கிலோ வரை உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்தபோது மீன்கள் அதிகமாக கிடைத்தது. ஆனால் தற்போது அணையின் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் மீன்கள் விரிக்கப்பட்ட வலைக்கு கீழ்சென்று விடுகிறது. இதனால் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு டன் முதல் மூன்று டன் மீன்களே கிடைக்கிறது.
webdunia photo
WD
இதனால் பவானிசாகர் மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன் வாங்க கடுமையான போட்டி நிலவுகிறது. முதல் தரம் மீன் கிலோ ரூ. 70 க்கும் இரண்டாம் தரம் ரூ.60 க்கும், மூன்றாம் தரம் அதற்கு குறைவாகவும் விற்பனையாகி வருகிறது.