கோவை ஐ.டி. பூங்கா பணிகள் டிசம்பரில் நிறைவு-கருணாநிதி!
செவ்வாய், 11 நவம்பர் 2008 (15:41 IST)
கோவையில் அமைக்கப்பட்டு வரும் டைடல் பூங்கா பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என்று முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசுகையில் முதல்வர் இதனைத் தெரிவித்தார்.
உறுப்பினர் கோவை தங்கம், கோவை மாவட்டத்தில் மென்பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு முன் வருமா? என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:
கோவை நகரை மேம்படுத்தும் விதமாக, விளாங்குறிச்சி கிராமம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முதற்கட்டமாக 29.08 ஏக்கர் நிலமும், இரண்டாம் கட்டமாக 32.51 ஏக்கர் நிலமும் எல்காட் நிறுவனத்தின் பெயருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்திற்கு சிறப்புப் பொருளாதார மண்டலமாக செயல்படுவதற்கான அனுமதி மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் எல்காட், டிட்கோ, இந்திய தகவல் தொழில் நுட்பப் பூங்கா மற்றும் டைடல் பார்க் சென்னை ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் டைடல் பார்க் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் கூறினார்.
இந்தப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் (அடுத்த மாதம்) முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.
இந்த பகுதியில் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனங்களை அமைக்க விப்ரோ நிறுவனத்திற்கு 10 ஏக்கர் நிலமும், டி.சி.எஸ். நிறுவனத்திற்கு 5 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு சில நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எஞ்சியுள்ள இடத்தில் சிறப்பு பொருளாதார மண்டல விதிகளுக்கு உட்பட்டு தகவல் தொழில்நுட்பவியல் கட்டடங்கள் தவிர, குடியிருப்பு மற்றும் சமூக வசதிகள் அடங்கிய ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைப்பதற்கு எல்காட் நிறுவனத்திற்கு நிர்வாக ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, அப்பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்பவியல் வல்லுநர்களுக்கு மிகச் சிறந்த அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகுவதோடு மென்பாருள் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று முதல்வர் பதிலளித்தார்.
தொழில் வளர வளர, போக்குவரத்து வசதிகள், அடிப்படை வசதிகளும் வளரும். அதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்று மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டார்.
சமூக நீதியைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேபோல வேலூரில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க எல்காட் நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான விவரங்கள் வந்தவுடன் இந்தப் பணிகள் தொடங்கப்படும் என்றும் உறுப்பினர் ஞானசேகரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் முதல்வர் தெரிவித்தார்.