நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் வழங்க நடப்பாண்டிற்கான முதல் துணை மதிப்பிட்டில் ரூ.100 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2008-2009ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீட்டை அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். அதில் ரூ.3,055 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்க வகை செய்யப்பட்டிருந்தது.
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டிற்கான அரசின் பங்காக ரூ. 110.52 கோடியும், நியாய விலை கடைகளில் மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் வழங்க ரூ.100 கோடியும், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க ரூ.80 கோடியும் அனுமதித்துள்ளது.
மின் வாரியத்திற்கு கூடுதல் பங்கு மூலதன உதவி வழங்க ரூ.570.50 கோடி தேவைப்படுவதால் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. நலிந்த பிரிவினரின் வீட்டு வசதி கடன்களை அரசு தள்ளுபடி செய்ததையொட்டி தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்திற்கு இழப்பீடு வழங்க ரூ.593.68 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் அகற்றல் வாரியத்திற்கு மானியமாக ரூ.3 கோடி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த அரசு ரூ.70.50 கோடியும் அனுமதித்துள்ளது.