என்கேகேபி ராஜாவை தகுதிநீக்கம் செய்யக் கோரிக்கை!

செவ்வாய், 11 நவம்பர் 2008 (10:02 IST)
முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் தடுக்கும் வகையில் அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஈரோடைச் சேர்ந்த பழனிச்சாமி-மலர்விழி தம்பதியர் பேரவைத் தலைவர் ஆவுடையப்பனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அமைச்சர் பதவியில் இருந்து ராஜா நீக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஆரம்பக்கட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரை பதவியில் இருந்து நீக்கி முதல் அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

தங்களையும், தங்கள் மகனையும் என்கேகேபி. ராஜா கடத்தி வைத்திருந்ததாகவும், அமைச்சர் பதவியில் இருந்த போது அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களது சொத்துகளையும் ராஜா அபகரித்துக் கொண்டதாகவும் ஈரோடு தம்பதியர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் அவர் மீதான குற்றச்சாட்டினை முதல் அமைச்சர் கருணாநிதியே ஒப்புக் கொண்டதால், அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பழனிச்சாமியும், மலர்விழியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையுடன் ராஜா மீதான புகார் மனுவை பேரவைத் தலைவர் ஆவுடையப்பனைச் சந்தித்து அளிப்பதற்காக நேற்று தலைமைச் செயலகம் வந்த அவர்களுக்கு, பேரவைத் தலைவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர்கள், தங்களது புகார் மனுவை பத்திரிகையாளர்களுக்கு அளித்தனர்.

பேரவைக் கூட்டத்தொடரில் என்கேகேபி ராஜா பங்கேற்கக் கூடாது என்றும், பேரவைத் தலைவர் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

ராஜா சட்டவிரோதமாக நடந்து கொண்டார் என்றும் தங்கள் புகாரில் ஈரோடு தம்பதியர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி கருத்து தெரிவிக்க பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் மறுத்து விட்டார். தன்னிடம் இன்னமும் புகார் மனு வரவில்லை என்பதால், இப்போதைக்கு எதுவும் கூற முடியாது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்