பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை தள்ளி வைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத்தொடர், கடந்த மார்ச்19ஆம் தேதி கூடி மே 14ஆம் தேதிவரை நடந்தது. இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.
இன்று காலை அவை கூடியதும், மறைந்த திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வீர. இளவரசன் உள்பட 6 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் இரங்கல் குறிப்புகளை அவைத்தலைவர் ஆவுடையப்பன் வாசித்தார்.
இதையடுத்து மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவை 9.37 க்கு முடிவடைந்தது.
வீர இளவரசன் மறைவை குறிக்கும் வகையில் ம.தி.மு.க. உறுப்பினர்கள் 5 பேரும் கருப்பு அடையாள சின்னம் அணிந்து சபைக்கு வந்திருந்தனர். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பூங்கோதை, என்.கே.கே.பி. ராஜா ஆகியோருக்கு எம்.எல்.ஏ.க்.கள் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்ய உள்ளது.