டிசம்பரில் கடல்சார் பல்கலை: முதல்வர் கருணாநிதி துவக்குகிறார்!

சனி, 8 நவம்பர் 2008 (15:00 IST)
சென்னை அருகேவுள்ள செம்மஞ்சேரியில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை டிசம்பர் மாதம் முதலமைச்சர் கருணாநிதி துவக்கி வைப்பார் என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

சென்னைத் துறைமுக நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருத்தரங்க மண்டபம், இரத்த சுத்திகரிப்பு மையம், மருத்துவப் பதிவேடுகள் பிரிவு உள்ளிட்ட வசதிகளை இன்று அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், செம்மஞ்சேரியில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துவிட்டதால் அதுகுறித்த குடியரசுத் தலைவரின் குறிப்பாணை விரைவில் வெளியாகும்.

இப்பல்கலைக்கழகத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இதன் அருகிலேயே 300 ஏக்கர் பரப்பளவில் வணிகவளாகம் அமைகிறது. இதில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கருத்தரங்க மண்டபம் ரூ.800 கோடி செலவில் அமைக்கப்படும். பல்கலைக்கழகம் துவக்கப்படும் தினத்தன்றே, முதல்வர் கருணாநிதி கருத்தரங்க மண்டபத்திற்கான அடிக்கல்லையும் நாட்டுவார்.

சென்னை துறைமுகத்தில் சரக்குகள் கையாள்வது உயர்ந்துள்ளது. அனைத்து துறைமுகங்களிலும் சராசரியாக 50.5 மில்லியன் மெட்ரிக்டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. சென்னை துறைமுகத்துக்கு இந்த ஆண்டு 431.26 கோடி லாபம் கிடைத்துள்ளது. இதன் மூலம் மேலும் பல வசதிகள் செய்யப்படும்.

சேது சமுத்திரத் திட்டத்தை எங்கள் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றிட விரும்புகிறேன். சர்ச்சைக்குரிய பகுதியை தவிர மற்ற இடங்களில் 11.5 மீட்டர் நீளத்துக்கு ஆழப்படுத்தும் பணி முடிந்து விட்டது. இவ்விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்து விட்டால் ஆறு மாதத்தில் முழுப் பணியையும் செய்து முடிப்போம் என்று அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்