பொதுத் தேர்வில் நேரம் அதிகரிப்பு : தங்கம் தென்னரசு அறிவிப்பு!
சனி, 8 நவம்பர் 2008 (10:47 IST)
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது வினாத்தாள்களைப் படிக்க மாணவர்களுக்கு வழங்கப்படும் நேரம் 10 நிமிடத்தில் இருந்து 15 நிமிடமாக அதிகரிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சிக்கான குறுந்தகடு, ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேடு, அரசு பள்ளிகளுக்கு கணினி வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடந்தது.
webdunia photo
FILE
இந்த விழாவில் பேசிய அமைச்சர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாளை படிக்க 10 நிமிடம் கூடுதல் நேரம் கொடுக்கப்படுகிறது என்றும் இந்த ஆண்டிலிருந்து வினாத்தாள் படிக்க கூடுதலாக 5 நிமிடம் கொடுக்கப்பட்டு 15 நிமிடமாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், பிளஸ் 2 செய்முறை தேர்வு, தேர்வு நடைமுறை எதிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமை பெற வேண்டும். இதற்காக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி பயிற்சிக்கூடங்கள் கொண்டுவரப்படுவதாக கூறிய அவர், அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 10,000 கணினி வழங்க முடிவு செய்யப்பட்டு இதுவரை 7,000 கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கிராமப்புற மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும் போது ஆங்கிலம் தெரியாமல் தடுமாறும் நிலை உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் இந்த குறைப்பாட்டைப் போக்கும் வகையில் ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.
ஆங்கில புலமையும், கணினி அறிவும் இருந்தால் மாணவர்களுக்கு உலகில் எந்த மூலையிலும் வேலை கிடைப்பது உறுதி என்று நம்பிக்கைத் தெரிவித்த அவர், இந்த ஆண்டிற்குள் அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.