நிவாரண பொருட்களை கருணாநிதி பார்வையிட்டார்!

வியாழன், 6 நவம்பர் 2008 (23:54 IST)
இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்பட்டுள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும், போர்வைகள் உட்பட நிவாரண உதவிப் பொருட்களையும் முதல் அமைச்சர் கருணாநிதி இன்று மாலை பார்வையிட்டார்.

இந்த நிவாரண உதவிப் பொருட்கள் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை துறைமுகத்தில் இருந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சுமார் 2 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் சென்னையில் இருந்து கப்பலில் இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றை முதல்-அமைச்சர் கருணாநிதி பார்வையிட்டார்.

அப்போது, செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழுமத்தின் அதிகாரி தாமஸ் ரீஸ், மத்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஐ.எம்.பாண்டே, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நிவராணப்பொருட்கள் அனைத்தும் நல்ல தரமுடன் உள்ளதாக தாமஸ் ரீஸ் தெரிவித்தார்.

இந்தப் பொருட்கள் அனைத்தும் வரும் 8 அல்லது 9ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்படும்.

அவரிடமிருந்து இந்த நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர், இலங்கையில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தமிழர் குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என்றும் அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்